Jun 03, 2026

“Gen Z” என்ற ஒரே அடையாளத்திற்குள் எல்லா டிஜிட்டல் உலகின் பயன்பாட்டு மிகுதியால் கவனச்சிதறலால் திண்டாடும் மாணவர்களுக்கு மத்தியில்,
பொழுதுபோக்கு என்றாலே ரீல்ஸ்,ஷார்ட்ஸ்,கைபேசி விளையாட்டுகள்,திரையரங்கம் என்று எளிதில் கவனத்தை திசை திருப்ப பல வாய்ப்புகள் விரிந்து..மேல்நாட்டு உணவுகள்,துரித உணவுகள் என்று உடல்நலத்தை நசுக்க வாய்ப்புகள் தெருவுக்குத் தெரு பெருகி..நல்லது/கெட்டதை சுய விருப்பு வெறுப்போடு அணுகும் சூழல் பரவலாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் உடல், மனது,ஆன்மா மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்கும் யோகக் கலையை ஐந்து வயது முதல் தன்னோடு இணைத்து அதைத் தன் விருப்பக் கலையாக்கி தனித்துவமாக மிளிர்கிறார் எட்டாம் வகுப்பு மாணவி ரூபன்யா.
அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகாடமி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ரூபன்யா.சிறு வயதில் இருந்தே யோகக் கலையில் தன்னை ஈடுபடுத்தி
இதுவரை இருபத்தி ஒன்று மாநில அளவிலான போட்டியிலும்,இருபது மாவட்ட அளவிலான போட்டியிலும்,இரண்டு தேசிய அளவிலான போட்டியிலும்,நான்கு சர்வதேச அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று பரிசுகளையும் வென்று இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பு சான்றிதழ்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களையும் பெற்று தன் யோக ஆசானுக்கும்,பெற்றோருக்கும்,பள்ளிக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசை வென்று புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி அவர்களின் கரங்களால் பரிசினைப் பெற்று தன் யோகத் திறமையை நிரூபித்துள்ளார்.
ஒன்பது வருடங்களாக இக்கலையில் சுழலும் ரூபன்யா பயிற்சியும் முயற்சியும் கைகூடி தன் உடலின் நெகிழ்வுத்தன்மையால் மிக லாவகமாக கடினமான ஆசனங்களையும் எளிதாக செய்து காண்போரை வியப்பூட்டுகிறார்.
தன் அண்ணன் யோகா பயிற்சி செய்வதை பார்த்ததன் மூலம் அவருக்கு யோகாவில் ஆர்வம் ஏற்பட்டது என்றும்.. மேலும், அவரது யோகா பயிற்றுவிப்பாளர்கள் சங்கர் மற்றும் உமா மகேஸ்வரி அவர்கள் தன்னைத் தொடர்ந்து ஊக்குவித்து அதிகமாக பயிற்சி செய்ய தூண்டியதால் தான் பல்வேறு வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ரூபன்யா.
மாணவியின் இந்த சாதனையை பள்ளி தாளாளர்,நிர்வாக அதிகாரி ,முதல்வர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டியுள்ளனர். யோகக் கலையில் இவரது வெற்றியும் திறமையும் தனித்துவமும் மற்ற மாணவர்களுக்கும் யோகாவில் ஈடுபட ஊக்கமளிக்கிறது.
தன்னுள்.. தனக்காக..தன்னைத்தேடிய ரூபன்யாவின் யோகாப் பயணம் தொடர்ந்து அவளின் இலக்கை நோக்கி இலகுவாக அவளை நகர்த்தட்டும்.தொடர்ந்து வெற்றியோடு பயணிக்க வாழ்த்துக்கள் ரூபன்யா.
Tirupur Reporter
53/3 Sardha Nagar, 2nd Street,
Samundipuram,
Tirupur - 641603.
Copyright © 2025 Tirupur Reporter